Thursday, December 9, 2010

நீலநிலா இதழ் கவிதைகள்

அடையாளம்
அவன் பற்றி
அவன் அறியாத போது...
அவனை                                      
அவனுக்கே
அடையாளப்படுத்தினார்கள்
"இன்ன சாதி
நீயென்று..!"
-கு.சிவபாலன்.

பயணம்
எல்லோரும்
ஜன்னலடைத்த பின்
வெளியேற முடியாமல்
எங்களுடன் பயணித்தது
பேருந்துக்குள் நுழைந்த
குளிர்..!
-வைகறை.

வழியனுப்புதல்
"டாட்டா" காட்டுவதால்
பெரியதாய் ஒன்றும் நடந்துவிடப்போவதில்லை
எனினும்,
ஏதோ இழந்தவாறு
உணர நேர்கிறது
"டாட்டா" காட்ட மறுத்தபடி
வழியனுப்பும் குழந்தையின் செய்கையால்..!
-ச.கோபிநாத்.


பிரியமானவனே..!
முதல் பார்வையில் என் நெஞ்சில்
விதையென விழுந்தாய்...
ஒவ்வொரு நாளும் புன்னகையால்
தண்ணீர் ஊற்றினாய்..                   
என் கட்டுபாட்டை மீறி
என்னுள் வேர்விட்டாய்..
பிரியமானவனே..!
என் இதயத்தில் ஊஞ்சலாட
தென்றல் கொண்டு வருவாயா..?
அல்லது
வேருடன் சாய்க்க
புயல் கொண்டு வருவாயா..?
-வெண்ணிலா பாலாஜி.

அனாதை இல்லங்களில்
அனைவரும்
உறவுக்காரர்களாகி விட்டார்கள்.
பாவம்
சேர்த்து விட்டவர்கள் தான்
அனாதையாகி விட்டார்கள்..!
-வேல்.சரவணக்குமார்.


குளிர்க்காற்றின்
கரம் பட்டு உடைந்து
பூமியெங்கும் சிதறிக் கொண்டிருந்தது
வான் புயலாய்
உடைந்த மேங்கள்...
சில துளிகளை மட்டும்
சேமித்துக் கொண்டிருந்தேன்
நனைந்தபடி..!
-தே.ரம்யா.

வெயில் பேசுகிறது 
நான் வீசும் ஒளியால்
என் கண்கள் கூசுகிறது
நீங்கள் மரத்தை வெட்டியதால்..!


என் தாகத்திற்கு
ஆற்று நீரை வற்ற வைத்தேன்,
நதி நீரை வற்ற வைத்தேன்,
மனித உடல் நீரை கூட
வற்ற வைத்தேன்,
பிளாஸ்டிக்கை நீங்கள் 
பயன்படுத்தியதால்..!


இனி நான் மட்டும்
தனியாக போகிறேன்
உலகம் உங்களால் அழிய போவதால்..!
-குகன்.


(நீலநிலா செப்டம்பர் 2010 & டிசம்பர் 2010 இதழில் 
வெளியான கவிதைகள்).

ஆதவன் எடுக்கும்
புகைப்படம்
நிழல்.
-எம்.ரமேஸ்.

எத்தனை ஜோடிகளை
இணைக்கிறது
திருமண மண்டபம்!
-டாக்டர். எம்.எஸ்.கோவிந்தராஜன்.

துக்க வீட்டில்
கண்ணீர் துடைக்கும்
பிஞ்சு விரல்கள்.
-அ.அப்துகாதர்.

இராவணன் ஆண்டால் என்ன?
இராமன் ஆண்டால் என்ன?
கும்பகர்ண தூக்கம்.
-இராம். மோகன்தாஸ்.

நடுச்சாலையில் மனிதன்
ஒதுங்கிச் சென்றது பேருந்து
இந்திய குடி(?) மகன்.
-பெரணமல்லூர் சேகரன்.

புதைத்த இடம்
அருகேயே படுத்துள்ளது
வளர்த்த நாய்.
-பொன்.குமார்.

"அப்பளம் வேணும்" என்று
அடம்பிடித்தது குழந்தை
நிலவைக்காட்டி..!
-தனலட்சுமி பாஸ்கரன்.

மூழ்கின பயிர்கள்
உரமானது நிலத்திற்கு
உழவனின் உடல்!
-சுந்தரம்பள்ளி சிவா.

கானகங்களில்
குயில் கூவல்களுக்கு பதில்
கோடாரிச் சத்தங்கள்.
-சுகந்தம்.

வந்தாலும் ஏச்சு
வராவிட்டாலும் ஏச்சு
குழப்பத்தில் மழை.
-சந்திரா பெருமாள்.

(நீலநிலா ஏப்ரல் 2011 இதழில் வெளியான தூளிப்பாக்கள்).

No comments:

Post a Comment